|
கோவிலின் சரித்திரச் சுருக்கம்...
1970ம் ஆண்டுக்கு முன்னதாக உலகத்தின் பல இடங்களிலிருந்து கனடா தேசத்திற்கு குடியேறியிருந்த இந்துக்களுக்கு தங்களின் குடும்பத்துடனும், சமுதாயத்துடனும் வழிபட, கோவில்கள் இல்லை என்ற குறை மிகவும் வருத்திக்கொண்டு இருந்தது. இக்குறையை நீக்க, பத்து அறங்காவலர்களைக்கொண்ட "கனடா இந்து ஆலய சமுதாயம்" என்ற அறக்கட்டளை நிறுவனம், 1973ம் ஆண்டு பதிவு செய்யப்பெற்று, ஆகம சாஸ்திர முறைப்படி ஒரு ஆலயத்தை கட்டி, அதை நிற்வாகிக்கும் பொறுப்பையேற்குமாறு, நிறுவப்பெற்றது. சுமார், பத்து ஆண்டுகாலம், சமூக, பொருளாதார நிலைகள் காரணமாக, கோவில் கட்டும் பணியில், மிகுந்த முன்னேற்றம் இல்லை எனினும், எடுத்த முயற்சியை கைவிடாமல், ஆலயப்பணியில் தீவிரமாக திட்டமிடுவதில் ஈடுபட்டனர், அறக்கட்டளை உறுப்பினர்கள். 1980ம் ஆண்டிற்குப்பின்னர், கனடாவிற்கு அதிக அளவில் இந்துக்கள் குடியேறிவரவும், நிதிநிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதாலும்,
டொராண்டோ நகரில், ரிச்மண்ட் ஹில் என்ற இடத்தில் கடவுள் அருளால் ஆலயத்திற்கு நிலம் வாங்கி, அதற்கு 1983ம் ஆண்டு பூஜை போடப்பட்டது. பின்னர், கோவில் கட்டும் பணி தொடங்கி, விநாயகப்பெருமான் விக்ரகம், தற்காலிகமாக அவ்விடத்தில் 1984ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர், இந்தியாவிலிருந்து, புரோகிதர் ஒருவரை வரவழைத்து, தினப்படி பூஜைகள் தொடங்கப்பட்டன.
பின்னர், 1987-88ம் ஆண்டில், நிறந்தரமான கட்டிடம் கட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பெற்று, பக்தர்களின் பேருதவியாலும், உழைப்பாலும், முருகப்பெருமானின் விக்ரகம், ஜுலை 2, 1988ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இப்பொழுது நிறுவப்பட்டிருக்கும் ஆலய வடிவமைப்பு, இந்தியாவில் தஞ்சை மாநிலத்தில் கட்டப்பட்டிருக்கும் பெரிய கோவில் போன்ற உலக பிரசித்தி பெற்ற ஆலயங்களை நிர்மாணம் செய்த குலத்தில் பிறந்தவரான திரு ஜானகிரமண ஸ்தபதியால், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கராசாரியரால் ஆசிசெய்யப்பெற்று, தொழில் நுட்ப கலை வல்லுநர்கள் பலர் உதவியுடன் நிறுவப்பட்டது என்று கூறுவதில் பெருமதிப்பு கொள்கிறோம். கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் அனைத்து கருங்கல் விக்ரகங்களையும், கோபுர சிற்பக்கலைகளையும் அமைத்த பெருமை, அவரையும் அவருடன் பங்கு பெற்ற பதினைந்து சிற்பிகளையும் சாரும். கோவில் கலை அழகையும், வடிவ அமைப்பையும் எழுத்தில் விவரிப்பது கடினம். நேரில் வந்து பார்த்தாலே அவைகளை முழுமையாக ரசிக்கமுடியும்.
1988ம் ஆண்டு வாக்கில், மற்ற சன்னிதிகளும் முழுமையாகக் கட்டிமுடிக்கக்பெற்று, ஆகம, ஸாஸ்திர முறைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டன. வட அமெரிக்காவிலுள்ள மற்ற ஆலயங்களைப்போன்று அன்றி, நம் கோவிலின் 90 சதவீத பணவரவுகள், அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம் போன்ற சேவைகள் மூலமாக கிடைக்கப்பெறுகின்றன. மற்ற கோவில்களில், சில வசதிபெற்றவர்களின் நன்கொடை மூலமே பெருமளவு வரவுகள் இருப்பது உங்களுக்கு அறிந்திருக்கலாம். 1992ல் பெருமாள் மற்றும் முருகர் சன்னிதிகளுக்கு விமானங்கள் கட்டப்பெற்று, "விமான கும்பாபிஷேகம்" நடைபெற்றது. பின்னர், 2001ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 30ம் நாள், கோவிலின் மஹா கும்பாபிஷேகம், மிக கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஒரு வருடம் சென்ற பின்னர், 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம், வட அமெரிக்காவிலேயே முதல் முறையாக, பன்னிரண்டு ஆழ்வார்களுக்கும், திரு ராமானுஜருக்கும் சன்னிதி எழுப்பப்பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. நம் கோவிலில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார்களின் திரு உருவங்கள், ஆழ்வார்களின் பிறப்புத்தலங்களில் உள்ள விக்ரகங்களின் ப்ரதி பிம்பமாக அமைக்கப்பட்டிருப்பது ஒரு சிறப்பம்சமாகும். ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் அருளிச்செய்த "நான் முகன் திருவந்தாதி" யில் அடங்கியுள்ள 25 பாசுரங்களால் அமைக்கப்பெற்ற தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி மாலையை, ஸ்ரீ வெங்கடேசப்பெருமாள் தினமும் தரித்துக்கொண்டு இருப்பதை நாம் காணலாம். மேலும், ஆழ்வார்கள் சன்னிதி முதலாண்டு நிறைவு விழாவின் பொழுது, திருப்பாணாழ்வார் அருளிச்செய்த "அமலன் ஆதிபிரான்" பாசுரங்கள் பத்தும் பொறிக்கப்பெற்ற தங்க மாலையினை பெருமாள் உத்ஸவ மூர்த்திக்கு, இந்த வருடம் (2003) ஸமர்ப்பணம் செய்யப்பட்டது, நம் கோவிலின் மற்றுமொறு சிறப்பு அம்சமாகும்.
வருடத்தில் 200 நாட்களுக்கு மேலாக பல்வேறு பண்டிகைகள், மிக சிறப்பாக கொண்டாடி வருவது நம் ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும். வருடம் தோறும் மிகக் கோலாகலமாக நடைபெறும் பிள்ளையார், முருகன் மறறும் பெருமாள் மஹோத்ஸவங்களைக்காண கனடாவின் பல்வேறு பாகங்களிலிருந்தும், அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து தேசங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வது இக்கோவிலின் பெரிய மகத்துவமாகும். நம் கோவிலிலுள்ள சித்திரக்கலை அழகு ஜொலிக்கும் தேர், வட அமெரிக்காவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும். ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேர் இழுக்கும் காட்சி, கண்கொள்ளாக்காட்சி. இவ்வாராக நம் கோவிலின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
|