Click here to go to the main page

மார்கழி மாதச்சிறப்பு
மார்கழி மாதப்புனிதமும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் சிறப்பும்...

தமிழ் மாதமாகிய மார்கழி பிறந்துவிட்டாலே நமக்கு நினைவுவருவது, ஆருத்ரா தரிசனமும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களும், சென்னை நகர வாசிகளுக்கு, கச்சேரி சீசன் மற்றும் விடியற்காலை பனியுமே ஆகும். கன்னியர்கள் மார்கழி நோன்பு நோற்கும் காலமும் அது. வட அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்து வரும் பலருக்கு இந்த புனிதமான மாதத்தின் சிறப்புக்களையும், திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களையும், அவைகளின் அர்த்தங்களையும் மிக எளிதான முறையில் அளிப்பதுவே இந்த கட்டுரையின் அடிப்படை நோக்கமாகும்.

மார்கழி, பன்னிரண்டு தமிழ் மாதங்களில் ஒரு மாதம். 'மார்கழி' என்னும் பெயருக்கு என்ன பொருள்? 'மாரி' என்ற வார்த்தையிலிருந்து உண்டானது 'மார்' என்பது. 'மாரி' என்றால் மழை என்று பொருள். 'கழி' என்றால் 'கழிந்த' அல்லது 'பின்னர்' என்று அர்த்தம். எனவே, மழைகாலம் முடிந்த பின்னர் ஆரம்பிக்கும் மாதம் என்று பொருள். தெற்கு இந்தியா மற்றும் இலங்கையில் அக்டோபர், நவம்பர் மாதங்கள் மழைக்காலம் என்று நமக்கு தெரிந்திருக்கக்கூடும்.

மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், 'மார்கழி நோன்பு' ஆகும். எப்படி இந்த நோன்பு ஆரம்பித்தது? ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர். மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் 'பாவை நோன்பு' என்றும் கூறப்படுகின்றது. கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) 'திருப்பாவை' யும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய 'திருவெம்பாவை' யும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை. திருப்பாவை முப்பது பாடல்களைக்கொண்டது. திருவெம்பாவை இருபது பாடல்களைக்கொண்டது. இந்த இருபது பாடல்களுடன் 'திருப்பள்ளியெழுச்சி' யிலுள்ள பத்து பாடல்களுடன் சேர்த்து அதுவும் முப்பது பாடல்களாக மார்கழிமாத முப்பது நாட்களிலும் பாடப்படுகின்றது. இப்பாடல்களில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும், இறைவனுக்கு காலமெல்லாம் தன்னலமின்றி சேவைசெய்யவேண்டும் என்பதைத்தவிர வேறு நோக்கங்கள் இல்லாமலிருப்பதையும் காணலாம்.

அதுசரி, ஆழ்வார்கள், ஆண்டாள் என்று மேலே குறிப்பிட்டோமே, யார் இவர்கள்? தமிழ் நாட்டில் வைணவ சம்ப்ரதாயத்தைத்தழுவி இந்துமத வளர்ச்சிக்காகவும், பக்தியை பெருக்குவததிற்கும் ஆர உழைத்தவர்கள் ஆழ்வர்கள். இறைவனின் பக்தியில் சதா ஆழ்ந்து இருப்பவர்களுக்கு ஆழ்வார்கள் என்று பெயர். ஆழ்வார்கள் மொத்தம் பன்னிரண்டு பேர். நம் கோவில் ஆழ்வார்கள் சந்நிதியில் நோக்கினீர்களானால், அங்கு பதிநான்கு விக்ரகங்களைக்காணலாம். கூடுதலாக இருக்கும் இரண்டு விக்ரகங்கள் யாருடையது என்று கேட்கிறீர்களா? இந்துமத மறுமலர்ச்சிக்கு காரணமாக இருந்த ஸ்ரீ ராமனுஜாச்சாரியர் மற்றும், திருமங்கை ஆழ்வாரின் வாழ்க்கை துணைவியரான குமுதவல்லி நாச்சியாரின் விக்ரகங்களே அவைகள். ஆழ்வார்களைப்பற்றிய முழு விவரங்களை இவ்வளைதளத்தில் காணலாம். ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்திருந்த பெரியாழ்வார் வீட்டு துளசி மாடத்தில் கண்டெடுக்கப்பெற்று, அவரால் வளர்க்கப்பட்டவர் ஸ்ரீ ஆண்டாள். பெரியாழ்வார் கண்ணபிரானை பெருந்தெய்வமாக கருதி, அவர்மீது பல பாடல்களைப்பாடியுள்ளார். அவைகளை தினமும் கேட்டு வளர்ந்த ஆண்டாள், தானும் கிருஷ்ண பக்தியில் அளவிலா ஈடுபட்டு, கண்ணனிடம் தெய்வீக காதலும் கொண்டு, அவரை மணக்கவும் ஆசைப்பட்டாள். தான் பிறந்து வளர்ந்தது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆயினும், தன்னை கோகுலத்திலுள்ள கோபியராகவே கருதி, கண்ணனை மணக்க வேண்டி, 'பாவை நோன்பு' நோற்றாள். அப்பொழுது அவர் பாடிய முப்பது பாடல்களை 'திருப்பாவை' என்றும், தான் கண்ணனை மணப்பதாக கனவு கண்டு பாடிய 143 பாடல்களை 'நாச்சியார் திருமொழி' என்றும் கூறுவர். பின்னர் ஸ்ரீரங்கத்திலுள்ள ஸ்ரீரங்கநாதனையே சென்றடைந்து, அவருடன் இரண்டறக்கலந்தார்.

இனி திருப்பாவை பாசுரங்களையும், அவற்றின் பத உரையையும் பார்ப்போமா?

                                               திருப்பாவை முதல் பாடல்